பதிவு செய்த நாள் : மே 19,2011,03:36 IST
ராசிபுரம்: "தொழிற்கல்வி பாடப்பிரிவில் உள்ள கணித பாடத்துக்கு, தனிப் பாடத்திட்டம் உருவாக்க வேண்டும்' என, முதுகலை கணித ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு முதுகலை கணித ஆசிரியர் சங்க மாநில பொதுக்குழுக் கூட்டம், ராசிபுரம் ஞானமணி கல்வி நிறுவன வளாகத்தில் நடந்தது. சங்க மாநிலத் தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் ராஜா வரவேற்றார். இணைச் செயலாளர்கள் பிரபாகரன், வருதராஜ் பாண்டியன், பூபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஞானமணி கல்வி நிறுவன தலைவர் அரங்கண்ணல், வித்யா விகாஸ் கல்வி நிறுவனர் குணசேகரன், எஸ்.ஆர்.வி., பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைவர் மனோகரன், நாமக்கல் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் துரைசாமி ஆகியோர் பங்கேற்று பேசினார். கூட்டத்தில், மத்திய கலைத் திட்டத்தின்படி, கணித பாடத்தை எளிமையாக கற்க செய்முறை தேர்வு (பிராக்டிகல்) அவசியமாகிறது. அத்தேர்வுக்கு, புள்ளியியல் மற்றும் புவியியல் பாடங்களுக்கு வழங்குவது போல், 50 மதிப்பெண் வழங்கி, கணித பாட திட்டத்தில் செய்முறை பகுதி சேர்க்கப்பட வேண்டும். தொழிற்கல்வி பாடப்பிரிவில் உள்ள கணித பாடத்துக்கு, தனிப் பாடத்திட்டம் உருவாக்க வேண்டும். ப்ளஸ் 2 கணித பாடத்துக்கு மட்டும், 220 பாடவேளை உள்ளது. இது காலாண்டு, அரையாண்டு, இடைத் தேர்வுகள் மற்றும் திருப்புத்தேர்வுகளை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் தயாரிக்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில், 140 பாட வேளை உருவாக்கப்பட வேண்டும். அனைத்து செய்முறை தேர்வுகளையும், கருத்தியல் தேர்வுக்கு பின்னால் நடத்தினால், மாணவர்கள் கருத்தியல் தேர்வை சிறப்பாக எழுத முடியும். எனவே, செய்முறை தேர்வுகளை கருத்தியல் தேர்வுக்கு பின்னர் நடத்த வேண்டும். பாட நூல் தயாரிப்பதிலும், ப்ளஸ் 2 பொது தேர்வுக்கு வினாக்கள் தயாரிப்பது மற்றும் விடை குறிப்புகள் (கீ) ப்ளஸ் 2 போதிக்கும் முதுகலை கணித ஆசிரியர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நிகழ்ச்சியில், மாநில பொருளாளர் ராஜசேகரன், மாநில, மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment